சுபாங் ஜெயா, ஆகஸ்ட் -21, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் நேற்று மாலை போலீசுக்கும் குற்றவாளிக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஆப்பிரிக்க ஆடவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அவன், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த வெளிநாட்டு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவன் என போலீஸ் கூறியது.
Hyundai Matrix காரில் வந்தவனை Jalan PSJ 9/1 சாலையில் புக்கிட் அமான் போலீஸ் நிறுத்த சொன்ன போது, போலீசை நோக்கி அவன் 5 முறை துப்பாக்கியால் சுட்டான்.
அவன் சுட்டதில், 2 தோட்டாக்கள் போலீஸ் காரில் பட்டன.
இதையடுத்து போலீசும் பதிலுக்கு சுட்டதில் 30 வயது அவ்வாடவன் அங்கேயே கொல்லப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஷூஹாய்லி மொஹமட் சேய்ன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) தெரிவித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்டவன் உட்பட 10 பேரை கொண்ட அக்கும்பல், 2018 முதல் சுடும் ஆயுதமேந்தி கொள்ளையிட்டு வந்துள்ளதில், இதுவரை 80 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தங்க நகைகள் விற்பனை, அந்நிய நாணய மாற்று சேவை மற்றும் முதலீடுகள் என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் லாயிலாக பலரிடம் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொண்டு, நேரில் வரவழைத்து அவர்களைக் கொள்ளையிடுவதே அக்கும்பலின் பாணியாகும்.
இந்நிலையில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இருப்பதாக நம்பப்படும் அவனது எஞ்சிய சகாக்களுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.