ஷா ஆலாம், மே 9 – நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள “சும்பாங்செ” (Sumbangsih) கிண்ண காற்பந்தாட்டத்தை ஒத்தி வைக்கும் சிலாங்கூர் எப்சியின் கோரிக்கையை, MFL எனும் மலேசிய கால்பந்து லீக் நிராகரித்தது தொடர்பில், சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்பருவத்திற்கான முதல் சூப்பர் லீக் ஆட்டமான அவ்வாட்டத்தில், சிலாங்கூர் எப்சி அணி கலந்து கொள்ளாதது ஏற்புடைய செயலே எனவும், அவ்வணியின் புரவலருமான சுல்தான் ஷராபுடின் தற்காத்து பேசியுள்ளார்.
அண்மைய சில காலமாக, காற்பந்தாட்டக்காரர்களையும், அதிகாரிகளையும் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் உயிருக்கு ஆபத்தான தாக்குதல்களை அடுத்து, அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைக்கு, ஆட்டக்காரர்களின் உயிர் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியமானது. கிண்ணத்தை வெல்வதில் அல்ல.
அந்த தாக்குதல் சம்பவங்களால், பாதுகாப்பு கோணத்தில் மட்டுமல்லாமல், மனதளவிலும் அவர்கள் இன்னமும் பலவீனமாக உள்ளனர். அதனால், நிலைமை சீரடையும் வரையில் அவர்கள் களமிறங்காமல் இருப்பது சரியான முடிவே என சுல்தான் ஷராபுடின் கூறியுள்ளார்.
அதே சமயம், விளையாட்டு வன்முறையை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை தாம் முழுமனதாக ஆதரிப்பதாகவும், ஆலாம் ஷா அரண்மனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் வாயிலாக சுல்தான் ஷராபுடின் கூறியுள்ளார்.
அதன் வாயிலாக, இஸ்கண்டார் புத்திரியிலுள்ள, சுல்தான் இப்ராஹிம் அரங்கில், நாளை நடைபெறவுள்ள, JDT- ஜொகூர் டாருல் தாக்சிம் அணிக்கு எதிரான “சும்பங்செ” ஆட்டத்தில் கலந்து கொள்ளாத சிலாங்கூர் எப்சி அணியின் முடிவை அவர் முழுமையாக ஆதரித்துள்ளார்.
அந்த ஆட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவைத் தொடர்ந்து, சிலாங்கூர் எப்சி அணி எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாதுகாப்பு உத்தரவாதத்தை தொடர்ந்து, அவ்வாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறுமென MFL அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.