
கோலாலம்பூர், செப் 19 – சுற்றுப்பயணிகளை அச்சுறுத்தும் அறிக்கைகளைத் தவிர்த்துக்கொண்டு சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கு தமது அமைச்சுடன் இணைந்து பணியாற்றும்படி எதிர்க்கட்சியினரைச் சுற்றுலா அமைச்சர் தியோங் கிங் சிங் கேட்டுக்கொண்டார். இன துவேச உணர்வுகளைக் கொண்ட அறிக்கைகைளை வெளியிட்டால் வெளிநாடுகளின் சுற்றுப்பயணிகள் நாட்டிற்குள் வரமாட்டார்கள் என அவர் கூறினார். பெரிக்காத்தான் நேசனல் வெளியிட்ட சில இனத்துவேச அறிக்கைகளால் மலேசியாவிற்கு வருகை புரியக்கூடாது என்ற தீர்மானத்திற்கு வந்ததாக சீனாவைச் சேர்ந்த சில சுற்றுப்பயணிகள் தம்மிடம் கூறியதையும் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
பல மாநிலங்களிலுள்ள சுற்றுள்ள மையங்களை பிரபலப்படுத்தும் முயற்சிக்கு தமது அமைச்சு எப்போதும் உதவ தயாராய் உள்ளதாக அவர் கூறினார். தங்களது தொகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் ஆலோசனைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்த பேச்சுக்களை நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி சுற்றுலா அமைச்சு அழைப்பு விடுத்தால் எம்.பிக்கள் கூட்டங்களில் கலந்து கொள்வது கிடையாது என்றும் தியோங் கிங் சிங் ஏமாற்றம் தெரிவித்தார். 12 ஆவது மலேசிய திட்ட மறுஆய்வு மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.