
சபா, செம்பூர்னாவில், சீன பெண் சுற்றுப் பயணியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக நம்பப்படும் முக்குளிப்பு உதவி பயிற்றுனர் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
நேற்றிரவு மணி 10.03 வாக்கில், சம்பந்தப்பட்ட பெண் சுற்றுப் பயணி செய்த புகாரை அடுத்து, உடனடியாக கைது செய்யப்பட்ட அந்த 27 வயது உள்நாட்டு ஆடவன், விசாரணைக்காக இம்மாதம் 11-ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, செம்பூர்னா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அசிஸ்டன் சுப்ரிடெண்டன் அரிப் அப்துல் ரசாக் உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பிற்பகல் மணி ஒன்று வாக்கில், தீவு ஒன்றின் நீரிணைப் பகுதியில், ‘ஸ்கூபா’ ஆழ்கடல் முக்குளிப்பு நடவடிக்கையின் போது, சம்பந்தப்பட்ட ஆடவன் தம்மை பல முறை முத்தமிட்டு பலாத்காரம் செய்ததாக, அந்த 25 வயது சீன பெண் தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் தாவாவ் விமான நிலையம் வாயிலாக கோலாலம்பூருக்கு பயணமான அப்பெண், அங்கிருந்து தாயகம் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, முக்குளிப்பு நடவடிக்கையின் போது, பெண் சுற்றுப் பயணியை ஆடவன் ஒருவன் முத்தமிடும் புகைப்படங்களும், அது தொடர்பில் அவ்விருவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பதிவும், போலீஸ் புகாரும் முகநூலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.