
மலாக்கா, அலோர் காஜாவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், தென் மாநிலங்களை நோக்கி செல்லும் வழியில், சுற்றுலா பேருந்து ஒன்று ஐஸ் லோரியை மோதி விபத்துக்குள்ளானதில், ஐவர் காயமடைந்தனர்.
பின்னிரவு மணி 1.47 வாக்கில், சம்பந்தப்பட்ட பேருந்து வலது சாலை வழியாக லோரி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுக் கொண்டிருந்த ஐஸ் லோரியை மோதி குடைச்சாய்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, சுற்றுலா பேருந்தில் 17 பேர் பயணித்த வேளை; அதில் நால்வர் உட்பட ஐஸ் லோரி ஓட்டுனரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அனைவரும் குடைச்சாய்ந்த பேருந்திலிருந்து மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த தங்கள் லோரியை, வலது சாலையில், குறைந்தது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் முந்திச் செல்ல முற்பட்ட போது, சம்பந்தப்பட்ட பேருந்து விபத்துக்குள்ளானதாக, சம்பவத்தை நேரில் கண்ட 27 வயது ஆர். விக்னேஸ் தெரிவித்தார்.