ஷா ஆலாம், டிசம்பர்-11, சிலாங்கூர், ஷா ஆலாம், செத்தியா ஆலாம் இரவுச் சந்தையில் பன்றி இறைச்சிகள் திறந்தவெளியில் விற்கப்படுவது குறித்து பெண்ணொருவர் கேள்வியெழுப்பியிருப்பது வைரலாகியுள்ளது.
அப்பெண் டிக் டோக்கில் பதிவேற்றிய 30 வினாடி வீடியோ, ‘Pork Crispy’ எனப்படும் மொறுமொறு என பொறிக்கப்பட்ட பன்றி இறைச்சிகளை விற்கும் அங்காடி கடையை மையப்படுத்தியிருந்தது.
முஸ்லீம்களும் அங்கு வியாபாரம் செய்கின்றனர்; அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் எப்படி பன்றி இறைச்சியை பொதுவில் விற்கலாமென அப்பெண் கேட்டார்.
வீடியோவின் கீழே majlisbandarayashahalam என்ற hashtag-கையும் அவர் வைத்துள்ளார்.
அவ்வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் மத்தியிலும் குழப்பம்.
அந்த இரவுச் சந்தையில் தான் ஹலால் உணவுகளுக்கு தனிப்பக்கமும் ஹலால் அல்லாத உணவுகளுக்கு தனி இடமும் உள்ளதே…அப்படியென்றால் பன்றி இறைச்சி வியாபாரி மீது என்ன தவறு என சிலர் கேட்டனர்.
இவ்வேளையில், இரவுச் சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் பன்றி இறைச்சியை திறந்த வெளியில் விற்க அனுமதியில்லை என, MBSA எனப்படும் ஷா ஆலாம் மாநகர மன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இரவுச் சந்தைக்கான ஹலால் விதிமுறைகளில் அது இடம் பெற்றுள்ளதாக Sinar Harian நாளேட்டிடம் MBSA-வின் பொது உறவு அதிகாரி Mohd Azhar Mohd Sharif கூறினார்.
வைரலான சம்பவத்தை விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட பன்றி இறைச்சி வியாபாரியின் உரிமம் மீட்டுக் கொள்ளப்படுமென்றும் அவர் சொன்னார்.
பன்றி இறைச்சி விற்பனையை, அதற்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களிலோ அல்லது மூடரங்கு சந்தைகளிளோ மட்டுமே மேற்கொள்ள முடியுமென்றார் அவர்.