செத்தியூ, டிசம்பர்-24 – திரங்கானு செத்தியூவில் 7.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 210 கிலோ கிராம் எடை ஷாபு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜாலான் குவாலா திரங்கானு – கோத்தா பாரு சாலையின் 62-வது கிலோ மீட்டரில் நேற்று காலை போலீஸ் சாலை தடுப்புச் சோதனை மேற்கொண்ட போது அவை சிக்கின.
போலீசை கண்டதும் சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே திடீரென நின்ற கறுப்பு நிற Vellfire காரை, போலீஸ் நெருங்கியது.
அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.
பிறகு சந்தேகப்படும்படியாகக் காணப்பட்ட மற்றொரு 4 சக்கர வாகனத்தையும் போலீஸ் பின் தொடர்ந்தது.
அக்கார் போலீஸ் வாகனத்தை இடித்து விட, போலீசார் துப்பாக்கியால் அதன் டயரை நோக்கி சுட்டனர்.
பின்னர் விடாது துரத்திச் சென்ற போது, காரை செம்பனைத் தோட்டத்தில் விட்டு விட்டு அதன் ஓட்டுநரும் தப்பியோடினான்.
தீயணைப்பு – மீட்புத் துறையினரை வரவழைத்து இரு வாகனங்களின் கதவுகளையும் போலீசார் திறந்த போது, அந்த 210 கிலோ கிராம் போதைப்பொருட்களும் சிக்கின.
கோலாலம்பூரில் விற்கப்படுவதற்காக, அண்டை நாட்டிலிருந்து அவை கிளந்தானுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.
ஒருவேளை, கைப்பற்றப்பட்ட அந்த போதைப்பொருட்கள் தலைநகர் சென்றால், 1.2 மில்லியன் போதைப்பித்தர்களால் அவற்றைப் பயன்படுத்த முடியுமென திரங்கானு போலீஸ் தலைவர் Datuk Khairi Khairudin கூறினார்.
சந்தேக நபர்கள் தீவிரமாகத் தேடப்படுகின்றனர்.