சென்னை, அக்டோபர்-15, தமிழகத்தின் சென்னையில் தொடர் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பாதுகாப்பாக வேளச்சேரி மேம்பாலத்தில் இப்போதே இடம் பிடிக்கும் முயற்சியில் வாகனமோட்டிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாலத்தில் இரு பக்க ஓரங்களிலும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, வைரலான வீடியோவில் காண முடிகிறது.
அடுத்த 4 நாட்களுக்கு அடைமழை பெய்யலாமென வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்திருப்பதால், வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழை மற்றும் பெருவெள்ளத்தை எதிர்கொள்ள முழு தயார் நிலையிலிருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
IT தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அக்டோபர் 15 முதல் 18 வரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வெள்ளமேற்படும் சாத்தியமுள்ள பகுதிகளில் மீட்புப் படகுகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.