சென்னை, ஏப்ரல்-29, தமிழகத்தின் சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் எனும் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் மேற்கூரையில் விழுந்தக் குழந்தையைக் காப்பாற்ற, அக்கம் பக்கத்தார் போராடியக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளன.
4வது மாடியில் இருந்து தவறி விழுந்த அந்த 7 மாத பெண் குழந்தை தரையில் விழாமல் நல்ல வேளையாக முதல் மாடியின் மேற்கூரையில் விழுந்து சிக்கியது.
குழந்தைத் தகரத்தில் விழுந்த சத்தம் கேட்டு வெளியே வந்து அதிர்ச்சியான அக்கம் பக்கத்தார், மேற்கூரையின் விளிம்பில் இருந்து குழந்தை எந்நேரத்திலும் சரிந்து விழலாம் என்பதால், ஒரு பாதுகாப்புக்காக உடனடியாக பெரியப் போர்வையை அகலமாக விரித்துப் பிடித்துக் கொண்டனர்.
மேலும் சிலர் எப்படியோ அந்த மேற்கூரை இருந்த வீட்டினுள் நுழைந்து கண்ணாடி பக்கமாக உள்ளிருந்து குழந்தையைப் பிடித்து இழுக்க முயன்றனர்.
ஒருவர் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பாதுகாப்பாக இறக்கிய போது தான், அங்குள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.
அதுவரை, குழந்தையின் உயிர் பற்றிய கவலையால் அக்கம் பக்கத்து தாய்மார்கள் அலறுவதும், உதவிக்கு ஆட்களைக் கூப்பிடுவதும், வைரலாகியுள்ள நெஞ்சைப் பதற வைக்கும் காணொலியில் தெரிகிறது.
மீட்கப்பட்ட குழந்தை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
குழந்தை விழுந்த போது அதன் பெற்றோர்கள் எங்கிருந்தார்கள் என்பது போன்ற கோணங்களில் போலீஸ் விசாரிக்கிறது.