
ஷா அலாம், மார்ச் 16 – சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவிகள் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்து மாநில சட்டமன்ற கூட்டத்தின் நடவடிக்கையை பார்வையிட்டனர். அதோடு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவுடன் எஸ்.யு.கே மண்டபத்தில் வெள்ளி விழா மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் அந்த மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த வருகையில் கலந்துகொண்ட மாணவிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பொரளாதாரத்துறையின் இளங்களை மற்றும முதுகலை மாணவிகளாவர்.
ஆசிய கண்டத்திற்கான அரச காமன்வெல்த் இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு ஏழு நாள் கல்விப் பயணத்தை மேற்கொண்டுள்ள அந்த மாணவிகள் சிலாங்கூர் சட்டமன்றத்தின் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்தவாறு சுமார் ஒன்றரை மணி நேரம் சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட்டதாக கணபதி ராவ் தெரிவித்தார். அதோடு பல இன மற்றும் பல்வேறு சமயத்தையும் கொண்ட மலேசியர்கள் அமைதியாக வாழ்ந்து வருவது குறித்தும் அந்த மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் சிலாங்கூரின் துரித மேம்பாட்டினால் இம்மாநிலத்தில் இருந்துவரும் வேலை வாய்ப்பு மற்றும் மக்களின் சமூக நலனில் கவனம் செலுத்திவரும் சிலாங்கூர் அரசின் நிர்வாக முறை குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதையும் கணபதி ராவ் சுட்டிக்காட்டினார்.