ஜோர்ஜ்டவுன், நவம்பர்-27, IndiGo விமான நிறுவனம், டிசம்பர் 21-ஆம் தேதியன்று சென்னை – பினாங்கு இடையில் நேரடி பயணச் சேவையைத் தொடங்குகிறது.
சென்னையும் பினாங்கும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டுள்ளன.
இந்நிலையில், அவ்விரு நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்திச் செய்யும் வகையில், இப்புதிய நேரடி விமானச் சேவை அறிமுகம் காண்கிறது.
சுற்றுலா மற்றும் படைப்பாக்க பொருளாதாரத் துறைக்கான பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் (Wong Hon Wai) தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த பினாங்கு-சென்னை நேரடி பயணச் சேவை அறிமுகம் கண்டது.
பினாங்கு சுற்றுலா துறை வளர்ச்சிக்கு இது கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இம்முயற்சி பினாங்கின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா, வணிகம் அல்லது மருத்துவத் தேவைகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வருமென, மாநில வீட்டு வசதி மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்கனவே சென்னை – கோலாலம்பூர் மற்றும் சென்னை – லங்காவி என இரு நேரடி பயணச் சேவைகளை வழங்கி வரும் IndiGo, மலேசியாவில் மூன்றாவது இடமாக பினாங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.