சிங்கப்பூர், மே-12 – சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், செல்லப் பிராணிகளாக வீட்டில் பூனைகளை வளர்க்க விரும்பினால், அதற்கு உரிமம் பெறுவது வரும் செப்டம்பர் தொடங்கி கட்டாயமாகும்.
செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி ஈராண்டுகளுக்கு வழங்கப்படும் கால அவகாசத்தில் மக்கள் இலவசமாக உரிமங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அக்காலக் கட்டத்துக்குப் பிறகு, கருத்தடைச் செய்யப்பட்ட பூனைகளை வளர்க்க ஓராண்டுக்கு 15 சிங்கப்பூர் டாலரைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அதே கருத்தடைச் செய்யப்படாத பூனைகளை வளர்க்க 90 சிங்கப்பூர் டாலரைக் கட்டி உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும் இதே தொகை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அடுக்குமாடிகளில் ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சம் 2 பூனைகளையும், தனியார் வீடுகளில் அதிகபட்சம் மூன்று பூனைகளையும் வைத்திருக்கலாம்.
அப்படி வளர்க்கப்படும் எல்லாப் பூனைகளுக்கும் நுண்சில்லு பொருத்தியிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
இப்புதிய விதிமுறையுடன் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மக்களுக்கு வழங்கப்படும் ஈராண்டு கால அவகாசம் முடிந்ததும், 2026 செப்டம்பர் முதல் தேதி தொடங்கி பூனைகளை உரிமம் இல்லாமல் வைத்திருப்போருக்கு 5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.