கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – அனைத்துலக அளவில் மலேசியா, 15ஆவது PIO எனும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளிக்கான பெருவிழாவை, எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடத்தவுள்ளது.
இம்முறை கலை, கலாச்சராம், மற்றும் வர்த்தக கண்காட்சிகளுடன் நான்கு சிறப்பு மாநாடுகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, மலேசியா மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதன் ஆழமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
தமிழ், மலையாளி, தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, ஒரிசா, சிந்தி, கன்னடம், மராத்தி, மலாக்கா செட்டி என அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, 15க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு சேர இவ்விழா பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கந்தையா மண்டபத்தில் (Kandiah Hall) PIO பெருவிழா நடைபெறவுள்ளது.
அதேவேளையில், செப்டம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில், செரஸ், அனைத்துலக இளைஞர் மையத்தில் மாநாடுகள் நடைபெறவுள்ளன.
முதன்முறையாக PIO தலைமை நிர்வாகிகளுக்கான மாநாடு, செப்டம்பர் 15 ஆம் திகதி பெட்டாலிங் ஜெயா BAC கட்டிடத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இவ்விழாவில் மலேசிய இந்தியர்கள் திரளாக கலந்து பயன் பெற வேண்டும் என்று மலேசியப் புலம்பெயர்ந்த இந்தியர் அமைப்பின் தலைவர் குணசேகரன் ஸ்ரீரங்கன் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி, இந்நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா, மலேசியவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி உட்பட பல சிறப்பு பிரமுகர்களின் முன்னிலையில் தொடக்கம் கண்டது.