புத்ராஜெயா, மே-3, புத்ராஜெயா, Presint 3-ல் உள்ள பல்பொருள் அங்காடிக் கடையொன்றில் No Palm Oil ( NPO) அதாவது ‘செம்பனை எண்ணெய் இல்லை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொட்டலத்துடன் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாகப் புகார் கிடைத்ததால், உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு KPDN அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டது.
பொது மக்களிடம் இருந்து புகார் வந்ததன் அடிப்படையில் வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில், பல்வேறு சுவையிலான ஐஸ்கிரீம்கள் அந்த NPO வாசகத்துடன் விற்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அவற்றின் மொத்த மதிப்பு RM 897.60 என KPDN அமைச்சர் Armizan Mohd Ali தெரிவித்தார்.
அவை அனைத்தும் மேல் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
2022 வர்த்தக விதிமுறைகள் சட்டத்தின் கீழ், செம்பனை மற்றும் செம்பனை எண்ணெய் சார் பொருட்களின் தயாரிப்பு தொடர்பில் கருத்து அல்லது அறிகுறிகள் பயன்பாட்டுக்கு உள்ள தடையின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அங்காடிக் கடை நடத்துநருக்கு 250,000 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் அல்லது ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் முதன்மை மூலப்பொருளான செம்பனை எண்ணெய் சார்ந்த பொருட்களை ஒதுக்கும் வகையிலோ அல்லது புறக்கணிக்கும் வகையிலோ வார்த்தையை வெளியிடுவது, குறியீடுகளைப் பயன்படுத்துவது போன்றவை சட்டப்படி குற்றமாகும் என அவர் நினைவுறுத்தினார்.