தெல் அவிஃவ், மே-6 – கட்டாரைத் தளமாகக் கொண்ட Al Jazeera தொலைக்காட்சி இஸ்ரேலில் மூடப்படுகிறது.
தமது அரசாங்கம் ஏகமனதாக அம்முடிவை எடுத்திருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் Benjamin Netanyahu அறிவித்துள்ளார்.
Hamas தரப்பின் ஊதுகுழலாகச் செயல்படுவோருக்கு இஸ்ரேலில் இடமும் கிடையாது, பேச்சுரிமையும் கிடையாது என்றார் அவர்.
எனவே, Al Jazeera தொலைக்காட்சி உடனடியாக மூடப்பட்டு, அதன் ஒளிபரப்புச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என Netanyahu அறிக்கையொன்றில் கூறினார்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்நிய ஊடகங்களின் செயல்பாட்டை நிறுத்தவும் அவற்றின் அலுவலகங்களை மூடவும் மூத்த அமைச்சர்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை, இஸ்ரேலிய நாடாளுமன்றம் கடந்த மாதம் தான் நிறைவேற்றியது இங்குக் குறிப்பிடத்தக்கது.
Netanyahu அரசாங்கத்துக்கும் பிரபல செய்தி ஊடகமான Al Jazeera-வுக்கும் நீண்ட காலமாகவே ஒத்துப் போகாது என்பது ஊரறிந்த இரகசியமாகும்.
Al Jazeera செய்திகள் சதா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலை ஏதோ கொடுங்கோல் அரசாங்கம் போன்று சித்தரிப்பதாகவும் Netanyahu குற்றம்சாட்டி வந்துள்ளார்.
அரபு மண்ணின் முதல் சுயேட்சை செய்தி நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் Al Jazeera தொலைக்காட்சி, ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் ஒளிபரப்பாகிறது.