
கோலாலம்பூர்,செப் 8 – செராஸ் Bandar Sri Permaisuri யிலுள்ள சிறார் பராமரிப்பு மையத்திலுள்ள சிறார்கள் துன்புறுத்தப்பட்டது தொடர்பில் மேலும் மூன்று புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். அந்த பராமரிப்பு மையத்தில் தமது இரண்டு வயது மகள் துன்புறுத்தப்பட்டது தொடர்பில் செப்டம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமையன்று ஆடவர் ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து மேலும் மூன்று புகார்கள் பெறப்பட்டதை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
Alaudeen Abdul Majid உறுதிப்படுத்தினார்.
இதுவரை அந்த பாராமரிப்பு நிலையத்தில் சிறார் துன்புறுத்தல் தொடர்பில் நான்கு புகார்கள் பெறப்பட்டதோடு , பாதிப்புக்கு உள்ளான சிறார்களின் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் கூறினார். கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் பாரம்பரிய சீன மருத்துவ நல சிகிச்சை திட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சிறார்களின் பெற்றோரின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அந்த சிறார் மையத்திலுள்ள சிறுமியை துன்புறுத்தியதன் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்ட பெண்ணின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதோடு, விசாரணை அறிக்கையும் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் அந்த அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும என Alaudeen தெரிவித்தார்.