செர்டாங், ஆகஸ்ட் -28 – சிலாங்கூர், செர்டாங் KTM ரயில் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உடலில் தீப்புண் காயங்களுடன் ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உடனிருந்த அடையாள ஆவணங்களை வைத்துப் பார்க்கும் போது, அவர் 43 வயதுடைய ஓர் இந்தோனீசியர் என நம்பப்படுவதாக செர்டாங் போலீஸ் கூறியது.
செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணி வாக்கில் பெண்ணொருவர் அச்சடலத்தை கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் AA அன்பழகன் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு, போலீஸ் குழு, தடயவியல் நிபுணர்கள், K9 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
சடலம், சவப்பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய மேல் விசாரணைகள் நடைபெறுவதாக அன்பழகன் மேலும் சொன்னார்.