
கோலாலம்பூர், நவ 1 – செலாயாங், ஜாலான் சுங்கை துவா-உலு யாம் சாலையில் 4WD நான்கு சக்கர வாகனத்தினால் மோதப்பட்ட குதிரை ஒன்று இறந்தது. அந்தாரா காபியிலிருந்து ஸ்ரீ கோம்பாக்கிற்கு சென்று கொண்டிருந்த 54 வயதுடைய ஆடவரினால் ஓட்டிச் சென்ற வாகனம் குதிரையை மோதியதாகவும் நேற்று காலை மணி 6.30 அளவில் அந்த விபத்து நிகழ்ந்ததாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்பிரடண்ட் நூர் அரிபின் முகமட் நசீர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் அந்த வாகன ஓட்டுனர் குதிரையை கண்ட போதிலும் தவிர்க்கமுடியாமல் அதனை மோதினார். அந்த விபத்து நிகழ்ந்த இடத்திலேயே குதிரை இறந்தபோதிலும் அந்த வாகன ஓட்டுனரும் அதிலிருந்த பயணியும் காயம் அடையவில்லையென நூர் அரிபின் வெளியிட்ட அறிக்கையில் கூறினார். மரணம் அடைந்த அந்த குதிரையை எவரும் பெற்றுச் செல்ல முன்வரவில்லை என்பதால் அந்த குதிரை எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு அருகே தொழுவங்கள் இருப்பதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்த குதிரை அங்கிருந்துதான் வந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லையென அவர் தெரிவித்தார்.