அமெரிக்கா, ஆகஸ்ட்-13 – செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 மைல்களுக்கடியில் ஆழமான நிலத்தடி நீர்தேக்கமிருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆழமான நுண்துளை பாறைகள் நீரினால் நிரப்பப்பட்டுள்ளன;
அதனை வைத்து பார்க்கும் போது, கிரகத்தின் மேற்பரப்பில் கடல்களை நிரப்பும் அளவுக்கு போதுமான தண்ணீர் அங்கிருக்கலாமென, அறிவியலாளர்கள் குழு மதிப்பிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை; ஆனால், இப்போது குறைந்தபட்சம், உயிர்களை நிலைநிறுத்தக் கூடிய ஓர் இடத்தையாவது அடையாளம் கண்டிருப்பது பெரும் முன்னேற்றமே என அறிவியலாளர்கள் கூறினர்.
2018 முதல் 2022 வரை செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இன்சைட் லேண்டரிலிருந்து வந்த தரவுகள், அறிவியலாளர்களின் கூற்றுக்கு ஆதாரமாக திகழ்கின்றன.
இப்புதியக் கண்டுபிடிப்பானது, செவ்வாய்க் கிரகத்தில் வாழ்க்கையைத் தேடுவதற்கான மற்றொரு நம்பிக்கைப் புதுப்பித்துள்ளது.
துல்லியமாக தண்ணீர் எங்கே உள்ளது, எவ்வளவு உள்ளது என்பது போன்ற ஆராய்ச்சிகள் இனி வேகமெடுக்கும் என நம்பப்படுகிறது.