செப்பாங், ஆகஸ்ட் 16 – 15 வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் சைபர்ஜெயாவில், முதலாளியால் வாடகைக்கு எடுக்கப்பட்ட மூன்று அறைகள் கொண்ட அடிக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வரும் சூழலைத், தீபகற்ப மலேசியாவின் மனிதவளத் துறை கண்டறிந்துள்ளது.
ஒரே வீட்டில் அதிக வெளிநாட்டினர் தங்குவதாக கிடைக்கப்பெற்ற புகார்களை தொடர்ந்து, தீபகற்ப மலேசியாவின் மனிதவளத் துறை,செப்பாங் மாநகர் மன்றம், மலேசிய குடிநுழைவுத் துறை ஆகியவற்றுடன் காவல்துறையும் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறுகலான அழுக்கான வீட்டில், மிகவும் நெருக்கமாக உறங்கும் சூழலையும் தாண்டி, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கட்டுமான தளத்தில் வேலையும், அதற்குத் தினசரி ஊதியம் 60 ரிங்கிட் பெற்று வரும் அவல நிலையில் அந்த தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு சட்டம் 1955யின் கீழ் சட்டம் 265 படி, அடிப்படை வசதிகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தருவது முதலாளிகளின் கடமையாகும்.
அவ்வகையில், இது குறித்து விசாரணை முடக்கி விடப்பட்டுள்ள நிலையில், வீடுகளை வாடகைக்கு விட்ட உரிமையாளர்களும் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவார்கள் என தீபகற்ப மலேசியாவின் மனிதவளத் துறையின் தலைவர் Kamal Pardi தெரிவித்தார்.