பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் சையின் ராயனின் தயார், சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சாட்சியங்களை மட்டுமே அளித்தார். அவர் எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை.
இன்றைய நீதிமன்ற வழக்கின் போது, சாட்சியச் சட்டத்தின், 26-வது பிரிவு, உட்பிரிவு ஒன்றின் கீழ், சந்தேக நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய, போலீஸ் அனுமதி கோரியதாக, சையின் ராயின் தாயாரின் வழக்கறிஞர் மாமுட் ஜுமஹாட் (Mahmud Jumaat) தெரிவித்தார்.
எனினும், போலீசாரின் அந்த விண்ணப்பத்திற்கு, சையின் ராயன் பெற்றோரை பிரதிநிதிக்கும் இரு வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சையின் ராயனின் தாய் எந்த ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை என்பது மாஜிஸ்திரேட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மாமுட் சொன்னார்.
முன்னதாக, இன்று காலை மணி 10.30 வாக்கில், தடுப்பு காவல் உடையில் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சையின் ரயானின் 29 வயது தாய், நண்பகல் மணி 12.50 வாக்கில், போலீஸ் வாகனத்தில் நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டு செல்வதை காண முடிந்தது.
சையின் ராயனின் கொலை தொடர்பில், இம்மாதம் முதலாம் தேதி, அவரும் அவரது கணவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைதுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.