கோலாலம்பூர், செப்டம்பர்-4 – பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையில் சொக்சோ பணத்தைக் கோருவதற்கு வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து அங்கீகாரம் வழங்கும் நடைமுறை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இயலாமைக்கான நிதிக் கோரல்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அங்கு மோசடி நிகழ்ந்திருப்பதாக, மலேசிய ஊழல் தடுப்பாணையம் (MACC) விசாரித்து வருகிறது.
இதையடுத்து மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் (Stevan Sim) அந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
என்றாலும், செபராங் ஜெயா மக்கள், மற்ற மருத்துவனைகளில் உள்ள மருத்துவர்கள் குழுக்களிடம் (Jemaah Doktor) செல்லலாமென்றார் அவர்.
இந்நிலையில், சொக்சோ கோரல்களை அங்கீகரிக்கும் விஷயத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்படுவதாகக் கண்டறியப்படும் மேலும் சில மருத்துவனைகள், அணுக்கமாகக்
கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.
இயலாமைக்கான நிதி கோரி, சொக்சோவுக்கு வரும் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதும் வழங்கப்படாமல் போவதும், Jemaah Doktor மருத்துவர்கள் குழு மற்றும் மேல்முறையீட்டு குழுக்களின் முடிவைப் பொருத்தே அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.
போலி ஆவணங்களுடன் நிதிக் கோரல் மோசடி செய்யப்பட்டது தொடர்பில், பினாங்கில் இதுவரை 3 மருத்துவர்கள் உட்பட 33 பேர் கைதாகி, விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.