ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-4, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் போலிக் கோரல் மோசடி தொடர்பில் கைதான கும்பலைச் சேர்ந்த 33 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் அரசாங்க மருத்துவர்கள் இருவர், தனியார் மருத்துவர் ஒருவரும் அடங்குவர்.
மலேசிய ஊழல் தடுப்பாணையம் (MACC) கேட்டுக் கொண்டதற்கிணங்க, அம்மூன்று மருத்துவர்களையும் 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க ஜியோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.
அதே சமயம் தனியார் தொழிலாளர்கள், ஏஜண்டுகள், ‘runner’-கள் உள்ளிட்ட 29 பேரை வெள்ளிக் கிழமை வரை மூன்று நாட்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஞ்சிய ஒருவரான முகவரின் மனைவியின் தடுப்புக் காவல் மேலுமொரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 முதல் 60 வயதிலான அனைவரும் 2009 MACC சட்டத்தின் 18-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அதோடு, குறைந்தபட்ச அபராதமாக, மோசடித் தொகையின் ஐந்த மடங்கு பணம் அல்லது பத்தாயிரம் ரிங்கிட், இரண்டில் எது பெரியதோ அதுவும் விதிக்கப்படலாம்.
அந்த ‘கூட்டுக் களவாணிகள்’ 2017-ஆம் ஆண்டு முதல் இதுவரை 21 லட்சம் ரிங்கிட்டுக்கு போலிக் கோரிக்கைகளைக் கையாண்டுள்ளனர்.
கிடைக்கப் பெறும் சொக்சோ தொகையில் 50 விழுக்காட்டை விண்ணப்பத்தாரர்களும், பாக்கி 50 விழுக்காட்டுப் பணத்தை மருத்துவர்கள், ஏஜண்டுகள், runner-கள் பங்குக் போட்டு வந்துள்ளனர்.