ஜோகூர் பாரு, ஜனவரி-1, ஜோகூர் பாருவில் சிங்கப்பூர் பெண் ஓட்டிச் சென்ற கார் மோதி 2 போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று Jalan Persiaran Alif Harmoni-யில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தம்போயில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், சந்தேகத்திற்குரிய வகையிலிருந்த Perodua Axia காரை பின் தொடர்ந்தனர்.
சோதனைக்காகக் காரை நெருங்கிய போது, அதன் ஓட்டுநர் திடீரென வேகமாகச் செலுத்தி 2 போலீஸ்காரர்களை மோதித் தள்ளினார்.
இதனால் தடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் கைகளில் காயமேற்பட்டது.
அப்போதும் அக்கார் நிற்கவில்லை; மாறாக பாசீர் கூடாங் நெடுஞ்சாலைக்குள் புகுந்து விட்டது.
பின்னர் செனாய் உத்தாரா டோல் சாவடி கம்பத்தை மோதிவிட்டு, வடக்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலைக்குள் புகுந்து தப்பியோடியது.
எனினும் கூலாய் மற்றும் குளுவாங் போலீசார் உதவியுடன் சிம்பாங் ரெங்கத்தில் அக்கார் பிடிபட்டது.
சந்தேக நபரான 38 வயது சிங்கப்பூர் பெண்ணும், காரிலிருந்த 49 வயது உள்ளூர் ஆடவரும் விசாரணைக்காகக் கைதாகினர்.
காரை சோதனையிட்டதில் போதைப்பொருள் அடங்கிய பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து ஜோகூர் பாருவில் 2 இடங்களில் நடத்திய சோதனைகளில் சுமார் 55,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரும் 6 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.