ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-4 – மறைந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ச்சின் பெங்குடன் (Chin Peng) தங்களைத் தொடர்புப் படுத்தியதற்காக, DAP மூத்தத் தலைவர்கள் மூவர் தொடுத்த அவதூறு வழக்கில், பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முஹமட் (Siti Mastura Muhammad) தோல்வி கண்டுள்ளார்.
அம்மூவருக்கும் மொத்தமாக 750,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென பினாங்கு, ஜோர்ஜ்டவுன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பாக தான் ஸ்ரீ லிம் கிட் சியாங்கிற்கு (Lim Kit Siang) 300,000 ரிங்கிட், லிம் குவான் எங்கிற்கு (Lim Guan Eng) 250,000 ரிங்கிட் மற்றும் திரேசா கோக்கிற்கு (Teresa Kok) 200,000 ரிங்கிட்டை வழங்க உத்தரவிடப்பட்டது.
அந்த கெப்பாளா பாத்தாஸ் (Kepala Batas) நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்ட அபராதத்தைச் செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு, செலவுத் தொகையாக மூவருக்கும் தலா 25,000 ரிங்கிட்டைத் தருமாறும் சித்தி மஸ்துரா பணிக்கப்பட்டார்.
திரங்கானு, கெமாமானில் 2023-ஆம் ஆண்டு மஸ்துரா பேசி வைரலான பேச்சுகள், அவதூறு அம்சங்களைக் கொண்டிருப்பதோடு ஆதாரமற்றவை என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
சித்தி மஸ்துரா அம்மூவருக்கும் எதிராக தீய எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார்; அவரின் தற்காப்பு வாதங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லையென நீதிபதி சொன்னார்.