குஜராத், மே-7,
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இன்று மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வாக்களித்தார்.
அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் மோடி வரிசையில் நின்று வாக்கைச் செலுத்தினார்.
வாக்களித்தப் பிறகு வெற்றிச் சைகை புரிந்த மோடி, மக்கள் பெருமளவில் திரண்டு வந்து அந்த ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இன்று 10 மாநிலங்களில் மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது.
ஜூன் 1-ஆம் தேதி கடைசிக் கட்ட வாக்களிப்பு முடிந்து, ஜூன் 4-ங்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உலக வரலாற்றில் மிகப் பெரியத் தேர்தலான இந்த 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், கிட்டத்தட்ட 100 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிப் பெற்றிருக்கின்றனர்.
இந்திய அரசியலில் அரிதாக நடக்கும் நிகழ்வாக தொடர்ந்தாற்போல் மூன்றாம் தவணையாகப் பிரதமர் பதவியில் அமர மோடி குறி வைத்துள்ளார்.
மோடிக்குப் போட்டியாக மீண்டும் ராஜீவ் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் 2 டசன் கட்சிகள் களம் காண்கின்றன.
எனினும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், மோடியின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியே அமோக பெரும்பான்மையில் வெற்றிப் பெறும் எனக் கூறுகின்றன.