
கோலாலம்பூர், ஜனவரி 15 – எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கலாச்சார மையத்தின் திறப்பு விழாவோடு, தேசிய அளவிலான பொங்கல் விழாவும் ஒருசேர நடைபெறவுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தின் மேன்மையும் முன்நிறுத்தி கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழாவிற்கு, அனைவரும் திரண்டு வருமாறு, தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி கொண்டாடப்படவிருகின்ற தைப்பூசம் விழாவை முன்னிட்டு, பத்து மலை ஸ்ரீ சுப்பரமணியர் சுவாமி ஆலயத்தில் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினர்.
இந்த பணிகளில், பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் புதிய சீரமைப்புகளுக்கான ஏற்பாடுகள் தைப்பூசம் விழாவிற்கு முன்னதாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இதுவரை, ஆலய பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்காக சுமார் 6 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக, டான் ஸ்ரீ நடராஜா கூறினார்.