கோலாலம்பூர், டிசம்பர்-29 – டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி புத்ராஜெயா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெரும் படைத் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ சார்பில் 118 பேருந்துகளும், பாஸ் கட்சி ஆதரவாளர்கள் சார்பில் 100 பேருந்துகளும் புத்ராஜெயா நோக்கி படையெடுக்கும் என நஜீப்பின் மகன் நசிஃபுடின் (Nazifuddin) தெரிவித்தார்.
9 ஆண்டுகள் பிரதமராக இருந்த போது, நாட்டுக்கும் மக்களுக்கும் தனது தந்தை ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவுக் கூறும் மலேசியர்கள் ஆதரவு தெரிவிக்க வருவதாக அவர் சொன்னார்.
இதன் வழி, அம்னோ, பெர்சாத்து, பாஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களால் புத்ராஜெயா அதிருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தனது தந்தைக்கு நியாயம் கிடைப்பதை உறுதிச் செய்வதில் ஒற்றுமை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை, நஜீப் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் நசிஃபுடின் கூறினார்.
வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவு குறித்து அந்த முன்னாள் பிரதமர் செய்துள்ள மேல்முறையீடு அன்றுதான் செவிமெடுக்கப்படுகிறது.
தனது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலாக மாற்ற முன்னாள் பேரரசர் கூடுதல் உத்தரவுப் பிறப்பித்திருப்பதாகவும், அதனை அமுல்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறும் நஜீப் செய்த விண்ணப்பத்தை, முன்னதாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்தே அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில், தேசிய முன்னணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ம.இ.கா-வும் அந்த ஆதரவுப் பேரணியில் பங்கேற்கவிருப்பதாக அறியப்படுகிறது.
பிரதமராக இருந்த போது இந்தியச் சமூகத்துக்கு நஜீப் ஆற்றிய பங்கு அளப்பரியது என்பதை, ம.இ.கா தவறாமல் பதிவுச் செய்து வந்துள்ளது.
ஆட்சியை இழந்து சிறைக்குச் சென்றாலும், வேறெந்த பிரதமரும் செய்யாத அளவுக்கு இந்தியச் சமூகத்துக்கு செய்துள்ளார் எனும் தோற்றம் நஜீப் மீது உள்ளது.
SRC International ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அரச மன்னிப்பு வாரியத்தால் அது பாதியாகக் குறைக்கப்பட்ட நிலையில், நஜீப் தற்போது காஜாங் சிறையில் உள்ளார்.