
ஜப்பான், ஆக 30 – ஜப்பானில் 18 வயது எட்டிய பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிள்ளை பாக்கியம் பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே மக்கள் தொகை சரிவை எப்படி சரி செய்வது என்பதில் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஜப்பானுக்கு இந்த ஆய்வின் முடிவு மிகப்பெரிய பேரிடியாக அமைந்திருக்கிறது.
அந்நாட்டு பிரதமர் Fumio Kishida மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு மானியம் வாழங்குவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதத்தில் செய்திருந்தார்.
ஜப்பானில் 2020ல் 126 மில்லியனாக இருந்த மக்கள் தொகை 2070ல் 87 மில்லியனாக குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
வாழ்க்கைச் செலவினம், கல்விச் செலவு போன்றவை பன்மடங்கு அதிகரித்து விட்டதால் பலர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அதே சமயத்தில், தாமதத் திருமணம் செய்வதாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.