
கோலாலம்பூர், நவ 4 – நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறிய சுங்கை பெசார் நாடாளுமன்ற தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் ஜமால் யூனுஸிற்கு எதிராக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் தேர்தல் ஆணையத்திற்கு ஆட்சேப கடிதம் அனுப்பியுள்ளார். திரேசா கோக் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் மூன்று லட்சம் ரிங்கிட் இழப்பீடு மற்றும் அதற்கான செலவுத் தொகையான 50,000 ரிங்கிட்டை வழங்க வேண்டும் என ஜமாலுக்கு உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 26 – ஆம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த இழப்பீட்டுத் தொகையை ஜமால் செலுத்தத் தவறியதால் அவருக்கு எதிராக செப்டம்பர் 18 – ஆம் தேதி திரேசா கோக் திவால் நோட்டிஸ் தாக்கல் செய்திருந்தார். இன்றுவரை நீதிமன்ற தீர்ப்பை ஜமால் நிறைவேற்றத் தவறியதால் அவருக்கு எதிரான திவால் நீதிமன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அப்துல் கனி சாலேவிற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக திரேசா கோக் தெரிவித்தார். இதனிடையே ஜமால் திவாலானவர் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படாதவரை அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிறுத்த முடியாது என திரேசா கோக்கின் கடிதம் குறித்து கருத்துரைத்தபோது தேர்தல்சீரமைப்பு குழுமத்தின தலைவர் Thomas Fann தெரிவித்தார். எனினும் திவால் வழக்கு முடிவுற்ற பின்னர் ஜமால் சுங்கை பெசார் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அந்த தொகுதியை அவர் காலி செய்ய வேண்டியிருக்கும் என Thomas Fann சுட்டிக்காட்டினார்.