
சென்னை, ஜன 16 – மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்காட்டு போட்டியில் 28 காளைகளை பிடித்த விஜய் என்பவர் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக பெற்றார். ஜெய்ஹிந்த புரத்தை சேர்ந்த மாடுபிடி வீரரான விஜய்க்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்பட்டது. மின்சார வாரிய ஊழியரான அவர் நேற்று காலை 7.30 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு 28 காளைகளை பிடித்தார்.
அதோடு இனி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். ஜல்லிக் கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்குப் பரிசாக மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது . அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தையும், விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் 14 காளைகளை பிடித்தற்காக மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
இந்த போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதனிடையே இப்போட்டியில் கலந்துகொண்டவர்களில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 11 பேர் மதுரை ராஜாஜி அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.