சுங்கை பட்டாணி, ஏப்ரல் 9 – கெடா, சுங்கை பட்டாணியிலுள்ள, “ஜாம் பெசார்” சதுக்கத்தில், திடீரென பட்டாசுகளும், மத்தாப்புகளும் வெடித்து சிதறிய சம்பவத்தால், பதற்றம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை மணி 4.48 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவம் தொடர்பான காணொளியை பொதுமக்கள் செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததை தொடர்ந்து, அது வைரலாகியுள்ளது.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் அந்த காணொளியில், திடீரென ஏற்பட்ட வெடிப்பால் பீதியடைந்த வியாபாரிகளும், பொதுமக்களும், தங்களை காப்பாற்றிக் கொள்ள முயலும் காட்சிகளும், பாதுகாப்பு கருதி சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை, கெடா மாநில தீயணைப்பு மீட்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.