கோலாலம்பூர், செப்டம்பர் -11 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியும், அங்குள்ள கட்டடங்களும் மக்கள் நடமாட்டத்துக்கு பாதுகாப்பானதே.
நில அமிழ்வு தொடர்பில் அமைக்கப்பட்ட பணிக் குழு அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.
அப்பணிக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் DBKL, பொதுப்பணித் துறை (JKR), போலீஸ், தீயணைப்பு மீட்புத் துறை, Indah Water Konsortium, கனிம மற்றும் புவி அறிவியல் துறை உள்ளிட்ட 8 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அவர்கள் தத்தம் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்ததில், கடந்த மாதம் ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவம் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே உட்படுத்தியது என பணிக்குழு முடிவுக்கு வந்துள்ளது.
எனவே, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து கவலை வேண்டாம் என DBKL கேட்டுக் கொண்டது.
இதனிடையே, சம்பவ இடத்தில் 160 மீட்டர் தூரத்துக்கு hoarding சுவர் பலகை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்தனை தூரத்துக்கு இல்லாமல், 3 பகுதிகளாக அது சிறியதாக அமைக்கப்படும் என்றும் DBKL தெரிவித்தது.
ஆகஸ்ட் 23-ஆம் தேதி 8 மீட்டர் ஆழத்துக்கு திடீரென நிலம் உள்வாங்கியதில், இந்தியா, ஆந்திராவைச் சேர்ந்த ஜி.விஜயலட்சுமி விழுந்து காணாமல் போனார்.
அவரைத் தேடி மீட்க 9 நாட்களாகக் கடுமையாகப் போராடியும் பலன் கிடைக்காததால், மீட்புக் குழுவினரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் தேடல் பணிகள் நிறுத்தப்பட்டன.