கோலாலம்பூர், அக்டோபர்-14 – கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதி அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பானதே.
கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா (Dr Zaliha Mustafa) இன்றைய மக்களவைக் கூட்டத்தில் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
பொறியியல் கழகம், புவிதொழில்நுட்ப அமைப்பு உட்பட நிபுணத்துவம் வாய்ந்த பல்வேறு தொழில்ரீதியான அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் கருத்துகளின் அடிப்படையில் அவ்வாறு முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமைப்பு மீதான ஆய்வும், அப்பகுதி, மக்கள் நடமாட்டத்துக்கு பாதுகாப்பானதே என்பதை உறுதிச் செய்துள்ளது.
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுச் சம்பவம் தொடர்பில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகாரன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் உள்ளிட்ட MP-கள் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையில், Dr சாலிஹா அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், அந்நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போன இந்திய பிரஜை ஜி.விஜயலக்ஷ்மி குடும்பத்துக்கு, DBKL வாயிலாக அரசாங்கம் 30,000 ரிங்கிட் பணத்தை வழங்கியது.
தனியார் துறையினரும் 10,000 ரிங்கிட்டை வழங்கியிருந்தனர்.
ஒருவேளை மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அக்குடும்பம் முடிவுச் செய்யுமேயானால், அதனை அரசாங்கம் தடுக்காது என்றும் அமைச்சர் விளக்கினார்.
அச்சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் சம்பவ இடத்தில் களமிறக்கி, 9 நாட்களாகத் தேடுதல் பணியை மேற்கொண்டதை அவர் சுட்டிக் காட்டினார்.