கெடா, செப்டம்பர் 20 – கெடா, ஜித்ராவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்குள்ள காய்கறி விவசாயங்களும், கால்நடை பண்ணை வியாபாரங்களும் பெரும் சேதத்தையும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.
இதில் பாதிக்கப்பட்ட, 50 முதல் 60 ஏக்கர் காய்கறி விவசாய நிலத்தையும், 8 ஏக்கர் நிலத்தில் கால்நடை பண்ணைகளைப் பராமரிக்கும் ஜித்ரா, கம்போங் லுபோக் பாதுவைச் (Kampung Lubok Batu) சேர்ந்த விவசாயி காளிடாஸ் முனுசாமி தனது வேதனையையும் பாதிப்பையும் வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.
கடந்த 2010-யில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போல் நீர்மட்டம் இல்லையென்றாலும், இம்முறை 4 முதல் 5 அடி வரை நீர்மட்டம் இருந்ததாகவும் அவர் கூறினார். இன்று சற்று குறைந்து 3 அடி வரை நீர்மட்டம் இருந்தாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் உயருமோ என அச்சம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் கால்நடைகள் உட்பட, அறுவடைக்குத் தாயாராக இருக்கும் பயிர்கள் அதிகப் பாதிப்படைந்ததுள்ளன.
விவசாயத்திற்கான பொருட்கள், இயந்திரங்கள் என ஏறக்குறைய 50 முதல் 60 ஆயிரம் ரிங்கிட் வரை நஷ்டத்தை சந்தித்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பாதுகாத்து வளர்த்து அறுவடைக்கு தயாரான விளைச்சல்கள் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தமளிப்பதாக காளிடாஸ் கூறினார்.
விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதி உதவியை அரசாங்கம் வழங்கினால், ஓரளவுக்கு தங்கள் பாதிப்பைக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக வட மலேசியப் பகுதிகளில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாகப் பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.