கோலாலம்பூர், ஏப்ரல் 30 – ஜெர்மனி, முனிச் நகரில், பறிமுதல் செய்யப்பட்ட நான்கு புகாட்டி வேரான் கார்களில் ஒன்று, தப்பியோடி தலைமறைவாக வாழும் தொழிலதிபர் லோ டேக் ஜோ என்பவருக்குச் சொந்தமானது என்பது, MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், எஞ்சிய மூன்று சூப்பர் கார்கள், அபுதாபியின் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின், முன்னாள் தலைவரான காடெம் அல் குபைசியுடன் தொடர்புடையவை என நம்பப்படுகிறது.
குறிப்பாக, ஜோலோவிடமிருந்து கையூட்டு பெற்றவர் என நம்பப்படும், அபுதாபியின் முன்னாள் நிறுவனமான Aabar Investments PJS நிறுவனத்தின், முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி முஹமது படாவி அல்-ஹுசைனிக்கு சொந்தமாக கார் ஒன்றும் அதில் அடங்கும் என கூறப்படுகிறது.
அந்த வழக்கு தொடர்பான விசாரணை 2020-ஆம் ஆண்டுக்கும் 2022-ஆம் ஆண்டுக்கும் இடைபட்ட காலத்தில் நடத்தப்பட்டது.
அவ்வழக்கு தொடர்பில் தகவல்களை திரட்ட, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு தனது அதிகாரிகளை அனுப்பி இருந்தது.
அதனை தொடர்ந்து, 1MDB ஊழலுடன் தொடர்புடையது என நம்பப்படும் நான்கு சிறப்பு பதிப்பு புகாட்டி வேய்ரான் சூப்பர் கார்களை, முனிச் நகரிலுள்ள, தனியார் கிடங்கு ஒன்றிலிருந்து ஜெர்மனிய போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சூப்பர் கார்கள், புகாட்டி வேய்ரான்களின் பிரத்தியேக “லெஜண்ட்ஸ்” தொடரின் தயாரிப்புகள் என்பதோடு, உலகிலேயே அதுபோல 18 வாகனங்கள் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.