
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரும், அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஷாஹிடான் காசிமும், மிகவும் “சர்ச்சைக்குரிய மற்றும் வேடிக்கையான எம்.பி.க்கள்” என, நாடாளுமன்ற கண்காணிப்பு அமைப்பான மைஎம்பி (MyMP) இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற ஹன்சார்ட் தரவுகளின் அடிப்படையில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு முதல், அவர்கள் குறித்த தரவுகளை ஆராயந்ததன் அடிப்படையில் அவர்களுக்கு அந்த பட்டம் சூட்டப்படுவதாக, MyMP நிறுவனர் Lau Chak Onn தெரிவித்தார்.
“Python” நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் ஆவணப்படுத்தும் முறை வாயிலாக, MyMP அமைப்பிலுள்ள சிறிய குழு இன்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ‘parlimen riuh’ மற்றும் ‘parlimen ketawa’ ஆகிய முக்கிய வார்த்தைகளை கொண்டு, பிரபலமான அவ்விருவரின் பெயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் முடிவு, 2018-ஆம் ஆண்டு ஜூலை தொடங்கி 2022-ஆம் ஆண்டு அக்டோபர் வரையில், நாட்டின் 14-வது பொதுத் தேர்தலுக்கு பின்னர், நாடாளுமன்றம் சர்ச்சையாகும் அளவுக்கு 531 riuh நிகழ்வுகளில் தோன்றிய ராயர் அபார வெற்றியை பதுவுச் செய்த வேளை ; ஷாஹிடான் 391 riuh நிகழ்வுகளின் வாயிலாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கலவையான கருத்துகள் நிலவும் போதும், வருகை மற்றும் கேட்கப்பட்ட கேள்விகளின் வாயிலாக சேகரிக்கப்பட்ட MyMP தரவுகளின் அடிப்படையில் ராயரும், ஷாஹிடானும் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என லாவ் கூறியுள்ளார்.