ஜோகூர் பாரு, அக்டோபர்-13,
ஜோகூரில் முதன் முறையாகத் தமிழ்க் கல்வியாளர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைப்பெற்றது.
ஜோகூர் மாநிலக் கல்வி இலாகாவுடன் இணைந்து ஜொகூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்றம், ஜொகூர் பாரு மாவட்டத் தலைமையாசிரியர் மன்றம் மற்றும் புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளியினர் அதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
தமிழ் மொழிக்காகவும் தமிழ்ப் பள்ளிகளுக்காகவும் சேவையாற்றி வருபவர்களைக் கௌரவிப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
அதனை ஜொகூர் மாநிலக் கல்வி இயக்குனர் ஹாஜி அனாஃபி சாமாட் சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
முன்னாள் ஜொகூர் மாநில ம.இ.கா தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன், சமூக நல அறக்கட்டளை இயக்குநர் இலன்கோ முத்துசாமி, ஜொகூர் மாநில ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் பெரியசாமி ஆகிய முக்கிய பிரமுகர்களுக்குக் கல்விக் காவலர் மாண்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மொத்தம் 62 மாண்பாளர்களுக்கும், 71 தலைமையாசிரியர்களுக்கும், 63 ஆசிரியர்களுக்கும், 37 மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
பாலர்ப்பள்ளி, ஆரம்பப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குநர் இரா. இரவிச்சந்திரன், தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு.சு.பிரகாஷ் மற்றும் ஜொகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் திரு. டொமினிக் சவரிமுத்து ஆகியோர் பாராட்டு விழாவை வழிநடத்தினர்.