ஜொகூர் பாரு, மார்ச் 3- ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னனி சார்பில் போட்டியிடும் ம.இ.கா வேட்பாளர்களுக்கு ஆதரவாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S. A விக்னேஸ்வரன் நேரில் களமிறங்கினார்.
கெமேலா தொகுதியில் போட்டியிடும் ஜோகூர் மாநில மகளிர் பிரிவி தலைவர் சரஸ்வதி நல்லதம்பி, புக்கிட் பத்து தொகுதியில் போட்டியிடும் எஸ். சுப்பையா, கஹாங் தொகுதியை தற்காத்துக் கொள்ள போட்டியிடும் ஜோகூர் ம.இ.கா தலைவர் டத்தோ ஆர்.வித்யானந்தன் மற்றும் தெங்காரோ தொகுதியில் போட்டியிடும் ரவின் குமார் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு வேட்டையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டார். அதோடு ஜொகூர் மாநில அம்னோ, மசீச, ம.இ.கா தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்தினார்.
ம.இ.கா வேட்பாளர்கள் போட்டியிடும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மக்களின் பிரச்னைகளை நேரில் கண்டறிந்த அவர் அதற்கு தீர்வு காண உறுதியளித்தார். மேலும் ம.இ.கா தொகுதிகளில் பல்வேறு மேம்பாடுகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் விக்னேஸ்வரன் மக்களிடம் தெரிவித்தார்.
ஜொகூர் மக்கள் தங்களின் எதிர்கால நலனுக்காக நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தேசிய முன்னனி அரசாங்கம் மட்டுமே மக்களுக்கு சிறந்த மேம்பாடுகளை கொண்டு வர முடியும் என்பதால் மக்கள் தேசிய முன்னனி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
புக்கிட் பத்து தொகுயில் போட்டியிடும் ஜொகூர் மாநில முன்னாள் கால்பந்து குழுவின் விளையாட்டாளரான சுப்பையா ஜொகூர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கூலாய் ம.இ.கா தொகுதியின் தலைவரும் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான சுப்பையா கோவிட் காலகட்டத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.
புக்கிட் பத்து தொகுதியில் போட்டி கடுமையாக இருந்தாலும் சுப்பையா வெற்றி பெறச் செய்வதற்கு ம.இ.காவும் தேசிய முன்னனியும் கடுமையாக போராடும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.