ஜொகூர் பாரு, ஏப்ரல்-14 – இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காபாவை ஒத்திருக்கும் படம் பொறிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட, வீட்டில் கால் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் ஜொகூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளன்று பத்து பஹாட்டில் உள்ள பேரங்காடியொன்றில் இருந்து அத்தகையை 11 துணிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
பொது மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்து அவைப் பறிமுதல் செய்யப்பட்டதாக இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் ஃபேர்ட் முகமட் காலித் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பேரங்காடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அதற்கு எச்சரிக்கை விடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், அத்துணிகள் தனது கிளைக் கடையில் தான் பறிமுதல் செய்யப்பட்டதாக AEON Big பேரங்காடி அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், பலராலும் கூறப்படுவது போல் அவை கால் துடைக்கும் துணிகள் அல்ல; மாறாக முஸ்லீம்கள் தொழுகைக்குப் பயன்படுத்தும் சிறிய வகை Sejadah துணிகள் என அது தெளிவுப்படுத்தியது.
தங்களின் இந்த தன்னிலை விளக்கம், இன-மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலான யூகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அப்பேரங்காடி கூறிற்று.
எது எப்படி இருப்பினும் அதிகாரத் தரப்பின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக AEON Big தெரிவித்தது.
முஸ்லீம்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலான காலுறைகள், பின்னர் பெண்களின் high heels காலணிகள் வரிசையில் மூன்றாவது சர்சையாக இப்புதிய விவகாரம் வெடித்துள்ளது.