
ஜோகூர் பாரு, பிப் 21 – புதிய கல்வி ஆண்டில் ஜோகூர் மாநிலத்தில் 71 தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த 2,013 மாணவர்களுக்கு பென்சில், எழுத்துப் புத்தகங்கள், வரைகோல் உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி , சுல்தானா ரொஹாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் இராமன், ஜோகூர் மாநில பாலர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும், மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான இரா.இரவிச்சந்திரன், ஜோகூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், இஸ்கண்டார் புத்திரி மாநகர் மன்ற உறுப்பினர் வெ.சங்கரபாண்டியன், மற்றும் சுற்றுவட்டார ம.இ.கா தலைவர்கள் ஆகியோர் இணைந்து தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் ஏற்பாட்டை செய்தனர்.
அந்த வகையில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அப்பள்ளியின் மண்டபத்தில் நடபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 186 மாணவர்கள் இந்த உபகரணப் பொருட்களை மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
இந்த பொருட்கள் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு நல்லதொரு தொடக்கமாக மட்டுமின்றி கல்வியில் அவர்களின் சிறந்த முன்னேற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என ரினி தோட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சு. தமிழ்ச்செல்வி தமதுரையில் தெரிவித்தார்.