ஜோகூர் பாரு, ஏப் 30 – ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் நீர் விநியோகிப்பு நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகள் நேற்றிரவு தடுத்து வைக்கப்பட்டனர். 36 மற்றும் 40 வயதுடைய சந்தேகத்திற்குரிய அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று பிற்பல் 2 மணியளவில் சிலாங்கூரிலுள்ள MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக MACC யின் அணுக்கமான தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட பல்வேறு புகார்களை தொடர்ந்து அந்த இரண்டு உயர் அதிகாரிகளும் இரண்டு குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட நீர் விநியோகிப்பு சேவை நிறுவனத்திடமிருந்து சேவைக்கான உதவிகளை பெறுவதற்கு அவர்கள் கையூட்டு வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அமல்படுத்தப்படாத 3.3 மில்லியன் ரிங்கிட் திட்டம் தொடர்பாக போலியான ஆவணங்களையும் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் தயாரித்தாகவும் கூறப்படுகிறது.