குளுவாங், செப்டம்பர் -23 – ஜோகூரில் குறைந்த மாணவர் எண்ணிக்கைப் பிரச்னையை எதிநோக்கியுள்ள இரு தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளை, நகர்ப்புறத்திற்கு இடமாற்றம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில் செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி கெம்பாசில் உள்ள இம்பியான் எமாசுக்கும், மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி பூலாய் உத்தாராவுக்கும் மாற்றப்படும்.
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) இதனை அறிவித்துள்ளார்.
மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதி வாழ் இந்தியச் சமூகத்தினருடன் நடத்த மாபெரும் சந்திப்புக் கூட்டத்தில் மந்திரி பெசார் இத்தகவலை கூறினார்.
அதே சமயத்தில் குழுவாங்கில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் இதர பிரச்னைகளுக்கும் உரியத் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
அவர் தமதுரையில், இந்திய அரசு சாரா அமைப்புகளுக்கு 10 லட்சம் ரிங்கிட், கோயிலொன்றுக்கு 4 லட்சம் ரிங்கிட் உள்ளிட்ட நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.
மேலும் பேசிய அவர், குளுவாங் பகுதியில் உள்ள இந்தியர்களுக்கான ஈமச்சடங்கு மற்றும் இடுகாடு பிரச்சனைகளை தீர்க்க 5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2 இடுகாட்டை அமைக்க மத்திய அரசாங்கத்திடம் நிதி உதவி கோரிக்கையையும் முன்வைத்தார்.
ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மாநில இந்தியர்களுக்கு 1 கோடியே 69 லட்சம் ரிங்கிட் நிதியை தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை 28-ஆம் தேதி மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.
அங்கு வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டாக அங்குள்ள 5000ற்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.