ஜோகூர், அக்டோபர் 7 – ஜோகூரில் வாரயிறுதி விடுமுறை சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்படுவது 587,343 பள்ளி மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 1.948 மில்லியன் பணியாளர்களைப் பாதிக்கும் என்று ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி தெரிவித்தார்.
ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் முடிவுக்கு இணங்க, இது குறித்து அனைத்து அம்சங்களிலிருந்தும் ஆராய்வோம் என்று அவர் கூறினார்.
இவ்வேளையில், முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்குப் பொருத்தமான நேரம் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
வார இறுதி நாட்களைச் சீரமைப்பது, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான கால அட்டவணைச் சிக்கல்களைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.
இந்த மாற்றம் குடும்ப உறுப்பினர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிடவும், எல்லை தாண்டிய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவும் எளிதாக்கும் என்றார் டத்தோ ஓன் ஹபிஸ்.
முன்னதாக, ஜோகூரில் 2014ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் வார இறுதியாக இருந்த நடைமுறை, அடுத்தாண்டு ஜனவரி முதல் திகதி தொடங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டும் என அம்மாநிலத்தின் இடைக்கால சுல்தான் அறிவித்தார்.