அரச மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான PENDEKAR அரச கப்பல்(KD) ஜோகூர் Tanjung Penyusup கடலில் முழுவதுமாக மூழ்கியுள்ளது.
எனினும் கடல் மார்க்க அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கப்பலிலிருந்த 39 பணியாளர்களையும் காப்பாற்றினர்.
அவர்கள் தற்போது KD SULTAN ISMAIL கப்பலில் பாதுகாப்பாக உள்ளனர்.
யாருக்கும் காயமேதும் ஏற்படவில்லையென TLDM அறிக்கையில் தெரிவித்தது.
சம்பவ இடத்தில் நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணிக்க ஏதுவாக TLDM கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நடுக்கடலில் பணியில் ஈடுபட்டிருந்த போது நீருக்கடியில் ஏதோ ஒரு பொருளுடன் மோதி கப்பலில் ஓட்டை விழுந்தது.
இதனால் கடல் நீர் கப்பலுக்குள் புகுந்து அது மெல்ல கவிழத் தொடங்கியது.
ஓட்டையை அடைத்து கப்பலை நிலைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் தராத காரணத்தால், பாதுகாப்புக் கருதி உள்ளிருந்த பணியாளர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.