ஜோகூர் பாரு, அக் 29 – தீபாவளியை கொண்டாடுவதில் பெரியவர்களைவிட சிறுவர்கள் அதுவும் பள்ளி மாணவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஜோகூர், கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே தீபாவளி குதூகலத்தை மெருகூட்டும் தீபாவளி கொண்டாட்டம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பள்ளியின் வளாகம் முழுவதும் தீபாவளி வாழ்த்து அட்டைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதோடு தமிழர் பண்பாட்டை பின்பற்றும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதோடு மாணவர்களும் வகுப்பு வாரியாக இந்தியர்களின் பாரம்பரிய பலகாரங்களை செய்து மகிழ்ந்தனர். மாணவர்கள் அச்சு முறுக்கு, அதிரசம் . நெய் உருண்டை போன்ற பலகாரங்களை ஆசிரியர்களின் உதவியோடு சுயமாக செய்து உட்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பள்ளி வளாகத்திலேயே அழகிய வண்ண மயில் கோலமும் போடப்பட்டது. இந்தியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும் என் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக தலைமையாசிரியர் திருமதி முருகம்மா ஜோன் கண்ணையா தெரிவித்தார்.