பொந்தியான், மார்ச் 6 – ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடத் தங்களுக்கு தொகுதி வழங்கப்படாத முடிவை ஏற்றுக் கொள்வதாக மக்கள் சக்தி கட்சி கூறியுள்ளது.
முடிவை ஏற்றுக் கொள்வதோடு தேசிய முன்னணியின் வெற்றிக்கு மக்கள் சக்தி தொடர்ந்து ஆதரவாக செயல்படுமென, அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.
தொடக்கத்தில் ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட தேசிய முன்னணி ஒரு தொகுதியை வழங்க முன் வந்திருந்தது. எனினும் வெற்றியைக் கருத்தில் கொண்டு அந்த தொகுதியை அம்னோவிற்கு வழங்க முடிவெடித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தொகுதிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே இருந்தன. கூட்டணி கட்சிகளான மசீச 15 இடங்களும், மஇகா நான்கு தொகுதிகளும் வழங்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தன. எனவே, நட்பின் அடிப்படையில் அம்னோவிற்கு தாங்கள் வழிவிட்டதாக ஆர். எஸ் தனேந்திரன் தெரிவித்தார்.
பெனுட், சங்லாங்கில் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் ஆகியோருடன் வாக்காளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.