ஜோகூர் பாரு, பிப் 24 – அடுத்த மாதம் நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான ம.இ.கா நான்கு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறது. ம.இ.காவுக்கு புதிதாக வழங்கப்பட்ட Kemelah சட்டமன்ற தொகுதியில் ஜோகூர் மகளிர் பிரிவின் தலைவி சரஸ்வதி நல்லதம்பி, Bukit Batu சட்மன்ற தொகுதியில் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும் கூலாய் தொகுதி காங்கிரஸ் தலைவருமான S. சுப்பையா போட்டியிடுகிறார்.
ஜோகூர் ம.இ.கா தலைவரும் நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஆர்.வித்யானந்தன் Kahang (கஹாங்) சட்டமன்ற தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு மீண்டும் போட்டியிடுகிறார். தெங்காரோ சட்டமன்ற தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவரான ரவின்குமார் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
மார்ச் 12 ஆம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளார்களின் பெயர் பட்டியலை. ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில அம்னோ தொடர்பு குழுத் தலைவருமான ஹஸ்னி முகமட் இன்று வெளியிட்டார். அந்த நிகழ்வில் ம.இகாவின் தேசிய உதவி தலைவர் டத்தோ அசோஜன், ஜோகூர் மாநிலத்திலுள்ள ம.இ.கா தலைவர்கள், ம.சீ.ச தலைவர் டாக்டர் வீ கா சியோங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜோகூர் சட்டமன்றத்திற்கான மொத்தமுள்ள 56 தொகுதிகளில் தேசிய முன்னணியின் சார்பில் அம்னோ 37 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ம.சீ.ச 15 இடங்களிலும் ம.இ.கா நான்கு இடங்களிலும் போட்டியிடுகின்றன.