ஜோகூர் பாரு, மார்ச் 2 – இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 20 கணமீட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது.
ஜோகூர் மக்களின் வாழக்கை செலவின சுமையை குறைக்கும் வகையில் இலவச நீர் திட்டம் அமையும். அதோடு அடுத்த அரசாங்கத்தை பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் அமைத்தால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வர்த்தக லைசென்சிற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லையென இன்று பெரிக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளிட்டபோது அக்கூட்டணியின் தலைவருமான டான்ஸ்ரீ Muhyiddin Yassin தெரிவித்தார்.
லஞ்ச ஊழலற்ற தலைமைத்துவம், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, மக்கள் நலனில் பரிவு, அவர்களது சமூக நலனில் கூடுதல் கவனம் , சுற்றுலாத்துறை மற்றும் நீடித்த சுற்றுச் சூழலுக்கு முன்னுரிமை வழங்கும் எட்டு முக்கிய கூறுகளைக் கொண்ட கொள்கை அறிக்கையை பெரிக்காத்தான் நேசனல் வெளியிட்டது . உயர்க்கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு மடிக் கணினி மற்றும் ரொக்க தொகையும் வழங்கப்படும் என்றும் முஹிடின் யாசின் கூறினார்.