கோலாலம்பூர், மே 6 – ஜோகூர், பாரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மையம் திறப்பது மீதான செய்தி வெளியானது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, ஆங்கில மொழி போர்டல் அல்லது இணைய அகப்பக்கம் ஒன்றின் தலைமை ஆசிரியர் இன்று காலை விசாரிக்கப்பட்டார்.
முதலில் அவரிடமிருந்து இன்று காலை மணி 11 மணி வாக்கில் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவிருந்த வேளை ; சம்பந்தப்பட்ட நபர் இன்று காலை மணி 8.30 வாக்கில், முன்கூட்டியே வாக்குமூலம் அளிக்க வந்ததாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் நடைபெற்று வருவதையும், ரஸாருடின் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, மலேசியாவின் பாரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மையம் எனும் தலைப்பில், ப்ளூம்பெர்க் வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில், தொழிலதிபர் டான் ஸ்ரீ வின்சென்ட் டானின் வழக்கறிஞர் செய்திருந்த புகார் தொடர்பில், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கடந்த வெள்ளிகிழமை ரஸாருடின் கூறியிருந்தார்.
அந்த செய்தியில், தவறான, உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து, குற்றவியல் சட்டம், நிந்தனை சட்டம், தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.